வியாழன், 20 நவம்பர், 2008

12. ஔவியம் பேசேல்

பொறாமையை மேற்கொண்டு பேசாதே என்பது இதன் பொருள்.

ஒருவனிடத்தில் உள்ள கல்வி செல்வம் செல்வாக்கு குணம் முதலியவற்றை கண்டபோது அவன் மேல் பொறாமை கொண்டு அவனை சீரழித்து இழித்து பேசுதல் மிகுந்த தீமையை விளைவிக்கும்.

இச்செய்கையால் இம்மையில் பாவமும் மறுமையில் நரகமும் உண்டாகும் என்பார்கள்.பொறாமைப் பேய் பிடித்தவர்கள் பிறருக்கு தீங்கிழைப்பதோடு தமக்கும் தீமையை உண்டாக்கிக் கொள்வார்கள்.

'ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு'என்று இதன் தீமையை ஔவையார் எடுத்துக் காட்டினார்.

பாண்டுவின் மனைவியாகிய குந்தி ஆண் குழந்தை பெற்ற விபரம் கேள்விப்பட்டு அஸ்தினாபுரத்தின் அரசனான திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி குந்தியின் மேல் பொறாமை கொண்டு தான் பல வருடங்களாக சுமந்திருந்த கர்ப்பத்தை சிதைத்துக்கொண்டாள்.

அப்படி அவள் செய்யாதிருந்திருந்தால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை ஏகசக்ராதிபதியாய் மூன்று உலகங்களிலும் தன்னாண்மை செலுத்தி அரசாட்சி செய்யும் மகாசூரனாயிருந்திருப்பான்.அப்படி இல்லாமல் சிதைந்த கர்ப்பம் வேதவியாசர் அருளால் ஒருவாறு கூடப்பெற்று அதனால் பொறாமைகிருப்பிடமான துரியோதனன் பிறந்தான்.

துரியோதனன் செல்வத்திலும் சௌகர்யத்திலும் மிகுந்து விளங்கும் பாண்டவர் மேல் பொறாமை கொண்டு அவர்களை வஞ்சகமாக அழைத்து மாயச்சூதாடி நாடு நகரம் முதலியவற்றை கவர்ந்து கொண்டதுமன்றி திரௌபதியை நடுச்சபையில் இழுத்து வந்து துகிலுரிந்து மானபங்கமும் செய்தான்.அதனால் துரியோதனன் மகாபாரத யுத்தத்தில் புத்திர மித்திர பந்து வர்க்கங்களோடு மரணமடைந்தது மட்டுமல்லாது நரக வேதனை களையும் அனுபவித்தான் என்று நூல்கள் கூறுகின்றன.

இதனால் பொறாமையால் இம்மை மறுமை இரண்டிலும் கேடு உண்டாகும் என்பது தெளிவாய் விளங்குகிறது.

ஔவியம் பேசேல் என்பதற்கு வீண் பெருமை பேசக்கூடாது என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.

11.ஓதுவதொழியேல்

எக்காலத்தும் அறிவினை வளர்க்கும் நூல்களைப் படிப்பதில் இருந்து விலகாதே என்பது இதன் பொருள்.ஒருவனுக்கு கல்விபோல் உறுதியைத்தருவது வேறொன்றும் இல்லை.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறப்பும் தொடர்ந்து உதவும் என்று பெரியவர்கள் உறுதியாய்க் கூறியிருக்கின்றனர்.தக்க கல்வியால் அறிவு வளர்தல் நிச்சயம்,ஆதலால் ஓதுவது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

இங்கிலாந்து நாட்டில் விக்டோரியா மகாராணியார் அரசுபுரிந்த காலத்தில் ‘கிளாட்ஸ்டன்’என்னும் பிரபு பிரதான மந்திரியாக இருந்தார்.அவர் தனது வீட்டில் பெரிய புத்தகசாலை ஒன்று வைத்து தமக்கு இருக்கும் பலதரப்பட்ட வேலைகளுக்கிடையில் கிடைக்கும் சொற்ப நேரத்திலும் இடைவிடாமல் படித்து வந்தார். என்னேரமாயினும் தினமும் இரவு இரண்டு மூன்று மணி நேரமாகிலும் படித்த பிறகே அவர் உறங்குவது வழக்கம்.அப்படி இடைவிடாமல் படித்து வந்த காரணத்தால் எல்லோரும் புகழும்படி ஒப்புயர்வில்லாத உன்னத நிலையை அடைந்தார்.

திருவள்ளுவரும்,வேதவியாசரும் இன்னும் இவர்களைப்போன்ற பலப்பல அறிஞர்களும்கூட கல்வியின் மேன்மையினால் யாவராலும் எக்காலத்திலும் கொண்டாடப்படும் பெருமை அடைந்து விளங்கினர்.

சிறிது கல்விகற்ற மாத்திரத்தில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவிட்டதாக எண்ணி அகந்தை கொண்டு திரிபவர் அறிவில்லாதவர்களே.அறிவுடையோர் மேலும் மேலும் கற்கும் ஆர்வம் கொண்டு எப்போதும் கற்பதை கை விடமாட்டார்கள்.

“பாடையேறினும் ஏடது கைவிடேல்”என்று இரு பொருள் தரும்படி நமது நாட்டில் வழங்கும் பழமொழி இதன் கருத்தை தெளிவாய்க்காட்டும்.கலைமகளும் இன்னும் கல்வி கற்பதாகக்கூறும் கருத்தும் இது பற்றியேதான்.

ஆதலால் கிடைத்த அவகாசங்களிலெல்லாம் தொடர்ந்து படிக்கவேண்டும்.

செவ்வாய், 4 நவம்பர், 2008

10.ஒப்புரவொழுகு

உலகத்தார் ஒப்புக்கொள்ளும்படியான ஒழுக்கத்தில் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள்.

பலரும் நேர்மை உள்ளதாக எண்ணுவதை இல்லாததாக எண்ணுவதும், பிழை உள்ளதாக நினைப்பதை நேர்மையாக எண்ணுவதும் பெரிதும் அவமானத்திற்கு உள்ளாக்கும்.

மேலும் பெரியோர்களால் நியாயமாக ஆராயப்பட்டு தகுதியானது என்று மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொள்ளாமல் நடப்பது பெரும் தீங்கினையும் விளைவிக்கும்.அப்படி இருப்பதால் இகழ்ச்சி அடைவதோடு இல்லாமல் எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகி சிலவேளைகளில் தீமையையும் அடையவும் நேரிடும்.

இளையான்குடி மாறர் என்ற சிவனடியார் ஒருவர் இருந்தார், அவர் தம் இடத்திற்கு வரும் சிவனடியார்களை பெரிதும் உபசரித்து விருந்தளித்து அவர்களுடைய மகிழ்ச்சி கண்டு தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.தன் செல்வம் முழுதும் இப்படியே செலவழித்ததில் அவர்கள் சீக்கிரமே வறுமை அடைந்தார்கள்.

ஒரு நாள் சிவபெருமான் ஒரு சிவனடியாரைப் போல வேடமணிந்து அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வந்தார்.அப்பொழுது மாறர் தமது வறுமை நிலைமைக்காக வருந்தி நிலத்தில் விதைத்திருந்த முளை நெற்களை வாரி வந்து தமது மனைவியிடம் கொடுத்து உணவு சமைக்கச்சொன்னார்.அவளும் கிடைத்த கீரையையும் நெல் முளைகளையும் பக்குவமாக சமைத்து சிவனடியாருக்கு இட்டாள்.

வந்த சிவனடியார்க்கு தக்கவாறு உபசரிக்கவேண்டிய செல்வம் இல்லையே என்று வருந்தினாள் தங்களுடைய முன் இருந்த நிலையை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகினாள்.

தாங்கள் பிறருக்கு செய்ய வேண்டிய உபசாரங்கள் குறைய நேரிட்டதற்காகவே ஒப்புரவு(உபகாரம்)அறிந்தவர்கள் தங்கள் வறுமை நிலைக்கு மிகவும் வருந்துவார்கள்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

9.ஐயமிட்டுண்

இல்லை என்று வந்த ஏழை களுக்கு பிச்சை இட்டு தானும் உண்ண வேண்டும் என்பது இதன் பொருள். இல்லாதவர்களுக்கு பிச்சை இடுவது தருமங்களுள் சிறந்தது.

“வறியார்க்கொன்றீவதேயீகை”என்று இதனை பாராட்டி கூறி இருக்கின்றார்கள் முன்னோர். தரும சிந்தனையை வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம் வேண்டும்.

மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர் பிறரால் எளிதாக செய்ய இயலாத அசுவமேதமென்கிற யாகம் ஒன்று செய்தார். பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில் மேன்மை அடைந்த வேதியர்களும்,தவ சிரேஷ்டர்களும், முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.

தருமபுத்திரர், வந்திருந்த அந்தணர் முதலியவர் களுக்கு அளவற்ற செல்வங்களை தானம் செய்து கொண்டு இருந்தார்.அந்த சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு தங்கம் போல பிரகாசிக்க அங்கு வந்து தருமபுத்திரர் முன்னால் வெள்ளமாய் ஓடும் தானசெய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது,அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!

தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து ”கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?இங்கு வந்து ஏன் இப்படி புரளுகிறாய் என்று கேட்டார்.இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

“ஐயா அரசரில் சிறந்தவரே!நான் வசித்துவரும் காட்டில் ஒரு ஏழை முனிவர்(குடும்பத்துடன் தவம் செய்பவர்)வந்து சேர்ந்து குடிசை ஒன்று அமைத்து அதில் தமது மனைவி,மகன், மருமகளோடு வாழ்ந்து வந்தார்.காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவைகளே அவர்களுக்கு உணவு.

ஒரு தடவை மழையே இல்லாமல் இவைகளும் கிடைப்பது அரிதாகி விட்டது.அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை சிறிது சிறிதாகச் சேர்த்து அதனை மாவாக அரைத்து சாப்பிடுவார்கள்.சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.

ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது தானியங்களை சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்போகும் சமயத்தில்,எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி விட்டது,பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது அளிக்கவேண்டும்”என்று மிகவும் கெஞ்சி பிச்சை கேட்டு நின்றார்,கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக் கூட முடியவில்லை.

அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து உபசரித்தார். அது அந்த முதியவருக்கு போதவில்லை அதை அறிந்த மற்ற மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை மனதார வாழ்த்திச் சென்றார்.அவர் அந்த இடத்தை விட்டுச் சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம் ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.

அன்ன ஆகாரமின்றி பல பல இடங்களிலும் அலைந்து திரிந்து பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு நடந்த அதிசயங்களை கண்டேன்.

பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த மாவை உண்ணும்போது அது என் மேலெல்லாம் ஒட்டிக்கொண்டது,அந்த மா ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம் மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!

அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன்.பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்த தருமத்தின் சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே” என்று கூறிய கீரி மேலும்..

”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்,ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள் மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது,ஆதாலால் நீங்கள் செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி பூஜையே மிகவும் சிறந்தது!”

என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச் சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்சென்றது கீரிப்பிள்ளை.

8.ஏற்பதிகழ்ச்சி

பிச்சை எடுத்தல் என்பது அவமானம் தரும் செய்கை என்பதில் சந்தேகம் இல்லை. பிச்சை எடுப்பவன், ஒருவனிடத்தில் பிச்சை கேட்கின்ற நேரத்தில் தன்னுடைய உடல் மனம் யாவும் குன்றிப்போய் விடுகிறான்.பிச்சை எடுத்து பிழைத்தல் என்பது தன் மானத்தை விட்டு வயிறு வளர்க்கும் தொழிலாகிவிடுகிறது.

மகாபலிச்சக்கிரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் பெற்ற திருமாலும்கூட தானம் பெற்றதால் ஏற்பட்ட இழிவினால் தனது திருமேனி குன்றி வாமனரானார் என்று புலவர்களும் கற்பனை செய்திருக்கிறார்கள்.

“பல்லெல்லாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச்
சொல்லெல்லாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி
மல்லெலா மகலவோட்டி மானமென்பதனை வீட்டி
யில்லெலா மிரத்த லந்தோ விழி விழி வெந்த ஞான்றும்”

என்ற செய்யுள் பிச்சை எடுத்து பிழைப்போரின் அவல நிலையை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

புதன், 23 ஜூலை, 2008

7.எண்ணெழுத்திகழேல்

எண் என்பது கணித நூல்,எழுத்தென்பது இலக்கண நூல்.இந்த இரண்டையும் மறவாமல்(இகழாமல்)கற்க வேண்டும்.

இவ‌ற்றை பயனற்றவை என்று எண்ணி அல‌ட்சியப்ப‌டுத்தக்கூடாது.

இவைகளை க‌ற்று அறிந்த‌வ‌ர்க‌ளுக்கே ஞான‌ நூல்க‌ள் தெளிவாக புரிப‌டும்,ஒருவருக்கு கணிதமும்,இலக்கணமும் இரு கண்கள் போல மிக முக்கியமானவை.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்'என்ப‌தும் இத‌னால்தான்.

அவந்தி தேச‌த்தில் இராஜ‌வேல் என்ற‌ அர‌சனுக்கு மிக‌வும் அழ‌கான ஆனால் சிறிதும் எழுத்தறிவில்லாத ம‌க‌ன் ஒருவன் இருந்தான் அவ‌னுக்கு எப்பாடு பட்டாகிலும் ப‌டிப்ப‌றிவை புக‌ட்டிவிட‌லாம் என்று அரசன் எவ்வ‌ள‌வோ முய‌ற்சிக‌ள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்க வில்லை.இத‌னால் கோப‌ம‌டைந்த‌ ம‌ன்னன்,இவன் இந்த நாட்டை ஆளுவதற்கு ஏற்ற‌வ‌ன் இல்லை என்று த‌ன் நாட்டை விட்டே அனுப்பி விட்டான்.அர‌ச‌குமாரனும் த‌ன‌து சொந்த நாட்டை விட்டு தென்னாட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்தான்.

ஒரு நாள் சோழ‌ராஜ‌ன் த‌லைந‌க‌ர‌மான காவிரிப்பூம் ப‌ட்ட‌ண‌த்திற்குள் நுழைந்து அங்கு ராஜ‌வீதியில் போய்க் கொண்டிருந்தான்.அப்பொழுது அர‌ண்ம‌னையின் மேல் மாட‌த்தில் நின்று கொண்டிருந்த‌ சோழ‌ ம‌ன்ன‌னின் ம‌க‌ள் அர‌ச‌குமார‌னின் அழ‌கில் மயங்கி அவனை சந்திக்க எண்ணி அன்று மாலை நகர்புறத்தில் உள்ள ஒரு வசந்த மண்டபத் திற்கு வரவேண்டும் என்ற தன் எண்ண‌த்தை ஒரு ஓலையில் எழுதி அதை அவனிடம் எறிந்தாள்.

எழுத‌றிவில்லாத‌ அர‌ச‌குமாரனோ அந்த‌ ஓலையில் என்ன‌ எழுதி இருக்கிற‌து என்று அறியாதவனாய் அதை தெரிந்து கொள்ள‌ விரும்பி யாரிட‌ம் கேட்ப‌து என்று யோசித்து ஊருக்கு வெளியில் உள்ள ஒரு ம‌ண்ட‌ப‌த்தில் இருந்த‌ ஒருவ‌னிட‌ம் அதை காட்டினான், அவ‌னோ மிக‌வும் கெட்ட‌வ‌ன், ஓலையில் எழுதியிருந்த‌தை ப‌டித்ததும் எப்படியாகிலும் அர‌ச‌குமார‌னை ஏமாற்றி விட்டு அர‌ச‌குமாரியை தான் அடைய விரும்பி அவ‌னிட‌ம் 'இனி நீ இங்கிருந்தால் உன் த‌லை போய்விடும் என்று எழுதி இருக்கிற‌து' என்றான்,அதை உண்மை என்று நம்பி ப‌யந்து போய் முட்டாள் அரசகுமாரன் சிறிதும் யோசியாமல் அந்த‌ ஊரை விட்டே போய் விட்டான்.

அன்றிர‌வு ராஜ‌குமாரி இவ‌ன் வ‌ர‌வை எதிர்பார்த்து வ‌சந்த‌ ம‌ண்ட‌ப‌த் திற்கு வ‌ர‌.. அங்கு தான் விரும்பிய அர‌ச‌குமார‌ன் அல்லாத‌ வேறொ ருவ‌ன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று உண‌ர்ந்த‌தும் வெட்க‌த் தினாலும்,துக்க‌த்தினாலும்,மிக‌வும் வருந்தி அப்பொழுதே த‌ன் உயிரை போக்கிக் கொண்டாள்.

பிறகு அங்கு நடந்த இந்த‌ விப‌ர‌ங்கள் யாவற்றையும் அறிந்த‌ அர‌ச‌ குமார‌ன் தான் செய்த‌ தவறினாலும்,தனக்காகவும்தானே ராஜ‌குமாரி உயிரை விட்டு விட்டாள் இனி நாம் உயிரோடு இருப்பதற்கு தகுதி இல்லை என்று நினைத்து வருந்தி அவ‌னும் த‌ன் உயிரை போக்கிக் கொண்டான்.க‌ல்விய‌றிவு இல்லாத‌ கார‌ண‌த்தால் இப்படியாக அவன் தன் வாழ்க்கையில் ப‌ல‌ இன்ன‌ல்களை எதிர்கொள்ள வேண்டிய‌தாகி விட்ட‌து.

எண்ணெழுத்திக‌ழேல் என்ப‌தில் 'எண் எழுத்து'என்ப‌த‌ற்கு எட்டெழுத்து என்றும்,யாவ‌ராலும் எண்ணுத‌ற்குரிய‌ எழுத்து என்றும் பொருள் கூறி க‌ட‌வுளின் திருநாம‌மாகிய‌ அஷ்டாக்ஷ்ர‌த்தை இகழாதே என்றும் சொல்வார்கள்.

6.ஊக்கமது கைவிடேல்

ஒரு தொழிலோ அல்லது வேறு என்ன காரியமாக இருந்தாலும் அதை செய்கின்ற காலத்தில் எதிர்பாரா இடையூறுகள் எது வந்தாலும் எக்காரணம் கொண்டும் நடுவில் நிறுத்தி விடாமல் அதில் முழுக்கவனம் செலுத்தி எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும்.

ஸ்காட்லாண்டில் நாட்டில் ராபர்ட் புரூஸ் என்ற அரசன் தன்னுடைய எதிரிகளோடு பல தடவை போர் புரிந்து தோல்வியடைந்து கடைசியில் உற்சாகம் குறைந்து இனி தன் முயற்சியால் ஒன்றும் பயனில்லை என்று கருதி அங்கிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும்படியான நிலையில் அவன் மட்டும் தனியாக ஒரு குடிசையில் வாழ நேரிட்டது.தான் அடைந்த இந்த இழிந்த நிலையைக் குறித்து தினமும் வருந்திக் கொண்டிருந்தான்.

ஒருநாள் புரூஸ் தனது குடிசையில் மல்லாந்து படுத்தபடி இனி என்ன செய்வது என்று கவலையோடு யோசித்துக் கொண்டிருக்கையில்,மேலே உத்தரத்தில் சிலந்தி ஒன்று ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு தன் வலையை கட்ட எண்ணி அது இருந்த உத்தரத்தில் தன்மெல்லிய நூலை கட்டி விட்டு மற்றொரு உத்தரத்திற்கு பாய்ந்து கொண்டு இருந்தது,இரண்டு உத்தரத்திற்கும் இடைவெளி அதிகம் இருந்ததால் அதை எட்ட முடியாமல் சிலந்தி கீழே விழுந்து விட்டது.ஆனாலும் அதற்காக பின்வாங்காத சிலந்தி மீண்டும் மேலே ஏறி முன் போலவே அடுத்த உத்தரத்திற்கு பாய்ந்தது!இந்த முறையும் கீழே விழுந்து விட்டது,இப்படியே திரும்ப திரும்ப ஆறு தடவை முயன்றும் சிலந்தி தன் முயற்சி பலன் அளிக்காமல் கீழே விழுந்து விட்டது.கீழே விழுந்ததில் மிகவும் களைப்படைந்து போன சிலந்தி அப்படியே அசையாமல் கீழே கிடந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த புரூஸ் இந்த சிலந்தியும் நாமும் ஒரே நிலையில் இருக்கிறோம்,நாம் பல தடவை போர் புரிந்து தோற்று களைத்தோம், இந்த சிலந்தியும் தனது முயற்சியில் பல தடவை தோற்று களைப்படைந்து விட்டது, இனி இதற்கும் வழியில்லை,அதே போல் நமக்கும் வேறு வழி காணோம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சிலந்தியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் அசையாமல் கிடந்த சிலந்தி மெதுவாக அசைந்தது,பிறகு மெதுவாக அங்கிருந்து நகன்று முன்போல மேலே ஏறத்தொடங்கியது! புரூஸ் கண்கொட்டாமல் அதையே அதிசயத்தோடு பார்த்து கொண்டிருக்கும்போது,மேலே வந்த சிலந்தி தன் முழு பலத்தோடு ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு பாய்ந்தது, இந்த முறை தன் விடாமுயற்சியால் அது நினைத்தபடி மறு உத்தரத்தை அடைந்தது.

இவையெல்லாவற்றையும் பார்த்த புரூஸ் இது நமக்கு கடவுள் காட்டிய நல்வழியாக நினைத்து நாமும் முயல்வோம் என்று இ துவரை தான் பட்ட கவலையை விட்டு பல சிரமங்களுக்கு இடையில் சிதறுண்டு போன தன் படையைத் திரட்டி மிகவும் ஊக்கமுடன் மீண்டும் தன் எதிரியுடன் போர் செய்தான்.
இந்த முறை தன் விடா முயற்சியால் எதிரியை முறியடித்து அதில் வெற்றியும் அடைந்தான்.

'ஊக்கமது கை விடேல் 'என்னும் நீதியை அந்த சின்னஞ்சிறு சிலந்தியின் செய்கையை அறிந்த ராபர்ட் புரூஸ் தானும் அதே போன்று நடந்ததால் மீண்டும் உற்சாகத்துடன் மகிழ்ச்சி யாகவும் வாழ்ந்தான்.

5. உடையது விளம்பேல்

கோட் செய்யப்பட்ட வாக்கியத்தை மறை

அருமையாக தன்னிடத்தில் உள்ள ஏதாவது ஒன்றை வெளியில் சொல்லக்கூடாது.

சொன்னால் சில வேளை எதிரிகள் அதை பறித்து கெடுதலை உண்டாக்குவார்கள்.அதோடு அருமையான அந்த பொருளின் தன்மையும் குறைந்து விடும்.

ராமர் தன் மனைவி சீதையோடு வனத்தில் வசித்து வந்த காலத்தில் ராமர் இல்லாத சமயம் பார்த்து தந்திரமாக இராவணன் சீதையை தூக்கி சென்ற கதை நாம் யாவரும் அறிந்ததே.

அப்படி தூக்கிச் செல்லப்படும் பொழுது துக்கம் தாளாமல் சீதை ஓவென்று வாய்விட்டு கதறி அழுதாள்.சீதையின் அழுகுரலைக்கேட்ட ஜடாயு என்னும் கழுகரசன் அதி வேகமாக பறந்து வந்து ராவணனை எதிர்த்து போரிட்டான்.

ரொம்ப நேரம் அவர்கள் இருவரும் வெற்றி தோல்வி இல்லாமல் சண்டையிட்டார்கள். ராவணன் ஜடாயுவை வஞ்சனையாக கொல்ல நினைத்து ஜடாயுவிடம்"உன் உயிர்நிலை எங்கே இருக்கிறது?"என்று கேட்டான்.

ஜடாயு சத்தியவான் ஆதலால் பொய்சொல்லக் கூடாது என்று ராவணன் கேட்டதும் தன் உயிர் நிலை தன்னுடைய இறகில் இருப்பதாக உண்மையை சொன்னான் .

பிறகு ராவணனுடைய உயிர் நிலை எங்கே இருக்கிறது எனக்கேட்ட ஜடாயுவிடம் ராவணன் தன் உயிர் நிலை தன் கால் கட்டை விரலில் இருக்கிறது என்று பொய்யை சொன்னான்.

உடனே ஜடாயு ராவணனின் கால் கட்டை விரலை வெட்டினான் அதே சமயத்தில் ராவணன் ஜடாயுவின் இறகுகளை வெட்டி எறிந்தான். தன் உயிர் நிலை வெட்டப்பட்டதால் ஜடாயு துடி துடித்து கீழே விழுந்து மாண்டான்.ராவணனோ ஒரு தீங்கும் இல்லாமல் வெற்றி பெற்று சீதையை தூக்கிச்சென்று விட்டான்.

தன் அருமையான உயிர் நிலையை எதிரியான ராவணனிடம் கூறிய தோஷத்தால் நல்லவன் ஜடாயு தன் உயிரை இழக்கும்படி நேர்ந்தது.

இந்த காரணங்களால்த்தான் நமது பெரியோர்கள் அருமையான மந்திரங்களை எல்லாம் பெறத்தக்கவர் களுக்கு மட்டும் ரகசியமாக உபதேசிக்கிறார்களே தவிர வெளிப்படையாக சொல்லுவதில்லை

செவ்வாய், 22 ஜூலை, 2008

4. ஈவது விலக்கேல்

ஒருவர் பொருளோ பணமோ எதுவாக இருந்தாலும் பிறருக்கு கொடுக்கின்ற காலத்தில் அதை நடுவில் நின்று தடுக்காதே என்பது இதன் பொருள்.

ஒருவருக்கு அவர் விரும்பின பொருளை மற்றொருவர் மனமொப்பி கொடுக்கின்ற காலத்தில் வேறொருவர் குறுக்கிட்டுத் த‌டுத்தால் அப்படி செய்தவர் இரண்டு பாவங்களை செய்தவராகிறார்.

தருமம் செய்தவருக்கு வரவேண்டிய புண்ணியத்தை வரவொட்டாமல் தடுப்பது முதல் பாவம்,இரண்டாவது பாவம் ஒருவர் விரும்பின பொருளை அடையப் போகும் காலத்தில் அவருக்கு அது கிடைக்கவிடாமல் தடுத்தது.

இப்படி தடுப்பவர் செய்த பாவம் அவரைச் சேர்வதோடு அவரது சுற்றத்தாருக்கும் அது சேரும்.கொடுப்பதை தடுக்கும் கொடியவரோடு அவரின் உறவுகளும் உண்ண உணவில்லாமல் உடுக்க உடையில்லாமல் தவிப்பார்கள் என்றும்,அந்த பாவத்தால் உண்டாகும் தீமைகள் பற்றியும் அக்காலத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

மகாபலி என்ற சக்ரவர்த்தி சுவர்க்கம்,மத்தியம்,பாதாளம் எனமூன்று உலகங்களை ஆண்டு வந்தான்.இவனால் துரத்தப்பட்ட தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகாபலியால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைச் சொல்லி அவற்றை நீக்க முறையிட்டுக் கொண்டார்கள்.தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி விஷ்ணுவும் ஒரு குட்டை பிரம்மச்சாரியாய் உருவமெடுத்து வாமனன் என்ற பெயருடன் சக்ரவர்த்தி மகாபலியிடம் வந்து தாம் அமர்ந்து ஜபம்செய்ய தமது காலடியால் மூன்றடி மண் யாசகம் கேட்டார்.

அப்பொழுது மகாபலியின் குருவாகிய சுக்கிராச்சாரியார் சக்ரவர்த்தியிடம்"அரசே உங்களிடம் யாசிக்கின்ற இவரை சாமன்யராக நினையாதீர் கெட்டவர்களை க‌ண்டித்து நல்லவர்களைக் காக்கும் கடவுளே உங்களை ஏமாற்ற வந்திருக்கிறார் அவர் கேட்டபடி தானம் செய்யாதீர்கள்"என்று தடுத்தார்.மகாபலியோ"எனக்கு எப்படிப்பட்ட தீங்கு நேரிட்டாலும் அவர் கேட்டதைத் தருவேன்"என்ற மன உறுதியோடு வாமனர் கேட்டபடி மூவடி மண் தானம் செய்ய தீர்மானித்தான்.

அப்பொழுது வாமனரும் தன் கையில் இருந்த கெண்டியை மகாபலி கையில் கொடுத்து தமக்கு மூவடி மண் தானம் செய்ய வேண்டினார்.மகாபலியும் கெண்டியில் உள்ள‌ நீரை வாமனர் கையில் வார்த்து தானம் செய்ய தொடங்குகையில் சுக்கிராச்சாரியார் மிகச்சிறிய உருவெடுத்து கெண்டியின் மூக்கில் நுழைந்து நீரை வரவிடாமல் தடுத்தார்,இதையறிந்த வாமனர் தன்னிடமுள்ள‌ தருப்பை ஒன்றால் கெண்டியின் மூக்கினுள் குத்தி மகாபலி செய்யும் தானத்தை தடுத்ததால் அவர் உணவும் உடையும் இன்றி கஷ்டப்படவேண்டும் என்று சாபமும் கொடுத்தார்.இதனால் கண்ணில் காயமடைந்து மிகுந்த வருத்தத்துடன் சுக்கிராச்சாரியார் விலகி நிற்க மகாபலியும் வாமனருக்கு மூன்றடி மண் தானம் செய்தார்.

அதுபோது வாமனர் திரிவிக்கிரமராய் பெரிய உருவெடுத்து ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் மற்றோரடியால் மாகாபலியை பாதாளத்தில் அழுத்திவிட்டார்.
தானம் கொடுப்பதை தடுத்த சுக்கிராச்சாரியார் கண்ணிழந்த நிலையில் உணவும் உடையும் இன்றி வருந்தி கஷ்டப்பட்டார்.

ஞாயிறு, 16 மார்ச், 2008

3. இயல்வது கரவேல்

கையில் உள்ளதை கொடுக்காமல் ஒளிப்பது என்பது இதன் கருத்து.

தேகி(பிச்சை)என்று கேட்ட ஒரு பிச்சைக்காரனுக்கு கையில் உள்ள பொருளை இல்லையென்று ஒளித்து வைக்காமல் கொடுக்க வேண்டும் என்பது இதனால் விளக்கப்பட்டது.

ஸர் ஃபிலிப் ஸிட்னி என்ற பெயருடைய ஆங்கிலப் போர்வீரர் ஒருவர் இருந்தார்.அவர் எதிரிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் குண்டு பட்டு அதனால் பலத்த காயமுற்று கீழே விழுந்து விட்டார்.

அந்த வேளையில் அதிக களைப்பினால் அவருக்கு தாங்க முடியா அளவு தண்ணி தாகமெடுத்தது, அதனால் அவரின் படைவீரர்கள் சிலர் அவரின் அந்த தாகத்தை தணிக்கவென்று பல இடங்களிலும் தண்ணீரைத்தேடி கடைசியில் வெகு தூரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை ஒரு சிறு கிண்ணத்தில் கொண்டு வந்தனர்.

அவர் அந்த நீரை அருந்தப்போகும் சமயத்தில் அவரின் அருகே படுகாயமடைந்து கிடக்கும் படைவீரன் ஒருவன் அந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தையே மிகவும் ஆவலோடு பார்ப்பதை கண்ட ஸர் ஃபிலிப் ஸிட்னி உடனே தன்னுடைய தாகத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு கொண்டு வந்த தண்ணீரை அந்த வீரனுக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

அந்த மரண அவஸ்தையிலும் தன்னால் இயன்றதை ஒளிக்காமல் உதவின இவரைப் போன்றோருடைய பெருமை எக்காலத்திலும் இவ்வுலகில் நிலைபெற்று நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.

இல்லையென்னாமல் கொடுக்கும் பெருமை உலகத்தில் அழியாமல் நிலைபெறும்.

சனி, 15 மார்ச், 2008

2. ஆறுவது சினம்

கோபத்துக்கு இடம் கொடுக்காமல் அதை அடக்கவேண்டும் என்பது இதன் பொருள்.

மனிதர்களிடத்தில் இயல்பாக இருக்ககூடிய குற்றங்களில் மிகவும் பொல்லாதது கோபம். ஒருவனுக்கு கோபம் ஏற்படும் நேரத்தில் அவன் பைத்தியம் பிடித்தவனைப்போல தன் வசம் தப்பி நடக்கின்றான். அதனால் கோபமடைந்தவன் பழிபாவங்களுக்கு அஞ்சாதவனாய்,இரக்கமற்று படித்திருந்தும் அறிவிழந்து கற்ற நல்லொழுக்கங்களை தவற விட்டு மானமிழந்து பலராலும் வெறுக்கப்படுவான் அதனால்த்தான் கோபம் சண்டாளம் என்று உலகத்தில் சொல்வது வழக்கம்.

தன்னைவிட வலிமையானவர் மேலும்,தனக்கு ஒத்து போகிறவர்கள் மேலும் உண்டாகும் கோபத்தை அடக்குவது ஒன்றும் சிறந்ததில்லை, மேலானவன் மேல் தன் கோபத்தைக் காண்பித்தால் அவன் மலையின் மேல் மோதும் மண்பாண்டம் என்ன ஆகுமோ அதுபோல உடைந்து போய் விடுவான்.

ஆகவே சுய அபிமானத்தால் கோபத்தை அடக்குவது என்பது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. தன்னைவிடத் தாழ்ந்தவர் மீது ஏற்படும் கோபத்தை அடக்குபவனே மிகச்சிறந்தவன்.

சில சமயங்களில் கோபம் கொலைக்கும் காரணமாகிறது.பிறரைக் கொல்லுவதோடு தன்னையும் சிலவேளைகளில் கொன்று கொல்கிறான்.இதனால்த்தான் சினம் சேர்ந்தாரை கொல்லியென்று கூறினார்கள்போலும்.பெருந்தீமையை விளைவிக்கும் இந்தக் கோபத்தை இளைமையில் இருந்தே அடக்க முயற்சிக்க வேண்டும்.

சரி இனி கதைக்கு வருவோம்:

உலகத்தில் மனிதர்களில் பலபேர்கள் ஒழுக்கம் குறைந்து தர்மத்தை விட்டு மிகவும் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று வெறுத்துப்போய் மனிதர்கள் இல்லாத இடத்தில் இருக்க விரும்பி கோதாவரிக் கரையில் தனிமையாய் பர்ணசாலை ஒன்று அமைத்து தன்னுடைய விரத அனுஷ்டானங்களை செய்து வந்தார் அந்தணர் ஒருவர்.இதனால் மோட்ஷத்தை அடையலாம் என்பது அவரின் எண்ணம்.

ஒரு நாள் அவர் ஆற்றில் மூழ்கி எழுந்து தன் உடம்பெங்கும் விபூதியை பூசிக்கொண்டு உருத்திராட்ச மாலைகள் அணிந்து ஒருபுறமாய் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வெயிலில் களைத்துப்போய் வந்த ஏழை ஒருவன் அங்கு இவர் இருந்த நிலையை கவனியாமல் ஆற்று நீரில் இறங்கி முழுகி தன்னுடைய அழுக்கடைந்த கந்தை துணிகளை
அங்கிருந்த கல்லின்மேல் அடித்து துவைக்க ஆரம்பித்தான்.

அப்போது துணியிலிருந்த நீர்த்துளிகள் ஜபம் செய்து கொண்டிருந்தவர் மேல் பட்டவுடன் சட்டென்று கண்களை திறந்து பார்த்தவருக்கு கடுங்கோபம்,உடன் ஆவசத்துடன் எழுந்து ஓடிச்சென்று அந்த ஏழையை அடித்து “அடேய்! நீ கொஞ்சம்கூட பயமில்லாமல் இங்கு வந்தது மட்டுமில்லாமல்
என் மேல் உன் அசிங்கமான அழுக்குத் துணியில் உள்ள தண்ணீரை தெரித்து என் விதத்திற்கு பங்கம் செய்துவிட்டாய் இனி ஒரு கண நேரம் இங்கு நின்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் ஓடிப்போ” என்று அதட்டினார்.

அந்த ஏழை உடனே அவரின் காலில் விழுந்து“ஐயா நீங்கள் இருந்ததை அறியாமல் இப்படி செய்து விட்டேன் பொறுத்து அருளவும் இதோ நான் வெகு தூரம் போய் விடுகிறேன்”என்று பணிவோடு சொல்லி வணங்கி எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

அழுக்கு துணிகளில் உள்ள நீர்த்துளிகள் பட்டு தீட்டடைந்து விட்டது என்று இவர் மீண்டும் நதியில் இறங்கி மூழ்கி குளித்து கரையேறினார்.அப்பொழுது சிறிது தூரத்தில் அந்த ஏழையும் மறுபடி ஒரு முறை ஆற்றில் மூழ்கி கரை சேர்ந்ததை பார்த்து அவனை சத்தமாக கத்தி கூப்பிட்டு ”அடேய் பாவி நான் உன்னை தீண்டின தீட்டுக்காக மீண்டும் தலை மூழ்கினேன் நீ எதற்காக இன்னொரு முறை மூழ்கினாய்?”என்று கேட்டார்.

அதற்கு அந்த ஏழை”ஐயனே!என்னைத்தீண்டிய தோஷத்திற்கு நீங்கள் மூழ்கினீர்கள் கோபமாகிய சண்டாளன் உங்கள் மேல் ஆவேசித்திருந்தபோது நீங்கள் என்னை தீண்டியதால் நேரிட்ட பெருந்தோஷத்திற்காக நான் மீண்டும் தலை முழுகினேன்”! என்று மறுமொழி சொன்னான். அப்பொழுதுதான் அவர் தனக்குள் கோபம் என்ற ஒன்று வந்ததால் எப்படி இப்படியோர் இழிந்த செயலை செய்து விட்டோம் என்று உணர்ந்து வருந்தி அவனிடம் சென்று தலைவணங்கி அவனையே குருவாகக்கொண்டு கோபத்திற்கு இடங்கொடாமல் நன்னெறியில் நின்றார்.

கோபத்தை மனதார அடக்கியவன் மனிதர்களுள் உயர்ந்தவன் ஆவதோடு தெய்வமாகவும் எண்ணப்படுவான்.சினத்தை விட்டவன் ஏழையாயினும் உயர்ந்தோனே!.

வெள்ளி, 14 மார்ச், 2008

1.அறஞ்செயவிரும்பு

தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள் தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொரு ள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம்.

ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது.

'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்துக் காட்டும். தர்மம் எப்படி தலைகாக்கும் என்பது பெரும்பாலும் நாம் அறிந்துதான் இருக்கிறோம். என்றாலும் இக்கதை அதைப் பற்றி மேலும் விவரிக்கின்றது.

குந்திபோசவம்ச ராஜனான சூரசேனனுக்கு குந்தி என்ற அழகிய மகள் இருந்தாள்,.அவள் துர்வாச ரிஷியின் அனுக்கிரகத்தில் கிடைத்த மந்திர சக்தியால் தான் கன்னியாய் இருக்கும்போதே ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள்! இதனால் தன் குலத்திற்கு பழி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பெற்ற குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விட்டு விட்டாள்.ஆற்றில் மிதந்து சென்ற பெட்டியை அத்தினாபுரி மன்னரின் தேரோட்டி கண்டெடுத்து அக்குழந்தைக்கு கர்ணன் என்று பெயரிட்டு தன் குழந்தை போல வளர்த்து வந்தான்.

கர்ணன் அரசர்களுக்கு உரிய வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் என பலவற்றையும் கற்றுத்தேர்ந்து அதில் சிறப்புடன் விளங்கினான்.இவனுடைய திறமைகளை அறிந்து பாராட்டிய அத்தினாபுர அரசகுமாரன் துரியோதனனுக்கும் இவனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உண்டானது. அந்த நட்பின் காரணமாய் துரியோதனன் கர்ணனை அங்கதேசத்திற்கு அரசனாக்கினான்.

கர்ணன் எப்போதும் தர்மம் செய்வதிலேயே நாட்டமுள்ளவன், யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மனமுடையவன். கொடையில் சிறந்தவன் கர்ணனே என்று எல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்டான்! இவன் பிறந்தபோது கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.அந்த கவசகுண்டலங்கள் இவனிடம் உள்ள அளவும் அவனை உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது.

இந்திரன் ஒரு முறை மாறுவேடம் கொண்டு கர்ணனிடம் வந்து அவனுடைய கவச குண்டலங்களை கேட்க கர்ணன் தன் உயிருக்கு உயிரான அவற்றையும் மனக்களிப்புடன் தானம் செய்தான்!

துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் உண்டான மகாபாரத யுத்தத்தில் கர்ணன் தனது உயிர்த்தோழனான துரியோதனனுக்கு துணைவனாய்,அவன் சேனைக்குத் தலைவனாய் பேருதவி புரிந்தான்.

அப்பொழுது சேனாதிபதியான கர்ணனுக்கும், பாண்டவ வீரனான அருச்சுனனுக்கும் பெரும்போர் நடந்தது,போர்க்களத்தில் அடுத்தடுத்து அருச்சுனன் விட்ட அம்புகள் பாய்ந்ததில் அடிபட்டு மூர்ச்சித்து ரதத்தில் விழுந்து விட்ட கர்ணனைக் காப்பாற்றும் பொருட்டு அவன் இத்தனைநாளும் செய்த தருமத்தின் பலனாக தருமதேவதை அவனிருந்த ரதத்திற்கு முன் வெளிப்பட்டு நின்று அருச்சுனன் கணக்கில்லாமல் சொரிந்த அம்புகூட்டங்களையெல்லாம் கர்ணன் மேல் படாமல் விழுங்கி நின்றாள்!

அருச்சுனனும் அம்பு போட்டு போட்டு கை அசந்து போய் விட்டான்,இதையெல்லாம் கண்டு நின்ற பலரும் தர்மம் தலைகாத்து நிற்பதை பார்த்து வியந்து கர்ணனை புகழ்ந்தனர்.

அப்போது தர்மம் ஜெயித்து நிற்பதையும்,அருச்சுனன் தோற்றத்தையும் அறிந்த கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதனைப் போன்ற கோலத்தில் மயங்கி சரிந்து கிடக்கும் கர்ணனிடம் போய் அவன் செய்துள்ள தர்மத்தின் பலன் முழுவதையும் தானமாக கொடுக்க வேண்டினான்.

சாகுந்தறுவாயில் கிடக்கும் கர்ணன் இந்த நிலையிலும் தர்மம் செய்ய சமயம் வாய்த்ததே அதுவும் தர்மமாக கேட்கும் பொருளும் தன்னிடம் இருக்கிறதே என்று மிக மகிழ்ச்சியோடு தன் தருமத்தின் பலனையெல்லாம் தானம் கொடுத்து விட்டான்.அதன் பிறகுதான் கர்ணனை அருச்சுனனால் கொல்ல முடிந்தது. தர்மம் உள்ளவரை அவனை கொல்ல முடியவில்லை.

தருமமே ஜயம். அறம் செய விரும்பு. தருமம் தலை காக்கும்!