ஞாயிறு, 16 மார்ச், 2008

3. இயல்வது கரவேல்

கையில் உள்ளதை கொடுக்காமல் ஒளிப்பது என்பது இதன் கருத்து.

தேகி(பிச்சை)என்று கேட்ட ஒரு பிச்சைக்காரனுக்கு கையில் உள்ள பொருளை இல்லையென்று ஒளித்து வைக்காமல் கொடுக்க வேண்டும் என்பது இதனால் விளக்கப்பட்டது.

ஸர் ஃபிலிப் ஸிட்னி என்ற பெயருடைய ஆங்கிலப் போர்வீரர் ஒருவர் இருந்தார்.அவர் எதிரிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் குண்டு பட்டு அதனால் பலத்த காயமுற்று கீழே விழுந்து விட்டார்.

அந்த வேளையில் அதிக களைப்பினால் அவருக்கு தாங்க முடியா அளவு தண்ணி தாகமெடுத்தது, அதனால் அவரின் படைவீரர்கள் சிலர் அவரின் அந்த தாகத்தை தணிக்கவென்று பல இடங்களிலும் தண்ணீரைத்தேடி கடைசியில் வெகு தூரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை ஒரு சிறு கிண்ணத்தில் கொண்டு வந்தனர்.

அவர் அந்த நீரை அருந்தப்போகும் சமயத்தில் அவரின் அருகே படுகாயமடைந்து கிடக்கும் படைவீரன் ஒருவன் அந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தையே மிகவும் ஆவலோடு பார்ப்பதை கண்ட ஸர் ஃபிலிப் ஸிட்னி உடனே தன்னுடைய தாகத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு கொண்டு வந்த தண்ணீரை அந்த வீரனுக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

அந்த மரண அவஸ்தையிலும் தன்னால் இயன்றதை ஒளிக்காமல் உதவின இவரைப் போன்றோருடைய பெருமை எக்காலத்திலும் இவ்வுலகில் நிலைபெற்று நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.

இல்லையென்னாமல் கொடுக்கும் பெருமை உலகத்தில் அழியாமல் நிலைபெறும்.

சனி, 15 மார்ச், 2008

2. ஆறுவது சினம்

கோபத்துக்கு இடம் கொடுக்காமல் அதை அடக்கவேண்டும் என்பது இதன் பொருள்.

மனிதர்களிடத்தில் இயல்பாக இருக்ககூடிய குற்றங்களில் மிகவும் பொல்லாதது கோபம். ஒருவனுக்கு கோபம் ஏற்படும் நேரத்தில் அவன் பைத்தியம் பிடித்தவனைப்போல தன் வசம் தப்பி நடக்கின்றான். அதனால் கோபமடைந்தவன் பழிபாவங்களுக்கு அஞ்சாதவனாய்,இரக்கமற்று படித்திருந்தும் அறிவிழந்து கற்ற நல்லொழுக்கங்களை தவற விட்டு மானமிழந்து பலராலும் வெறுக்கப்படுவான் அதனால்த்தான் கோபம் சண்டாளம் என்று உலகத்தில் சொல்வது வழக்கம்.

தன்னைவிட வலிமையானவர் மேலும்,தனக்கு ஒத்து போகிறவர்கள் மேலும் உண்டாகும் கோபத்தை அடக்குவது ஒன்றும் சிறந்ததில்லை, மேலானவன் மேல் தன் கோபத்தைக் காண்பித்தால் அவன் மலையின் மேல் மோதும் மண்பாண்டம் என்ன ஆகுமோ அதுபோல உடைந்து போய் விடுவான்.

ஆகவே சுய அபிமானத்தால் கோபத்தை அடக்குவது என்பது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. தன்னைவிடத் தாழ்ந்தவர் மீது ஏற்படும் கோபத்தை அடக்குபவனே மிகச்சிறந்தவன்.

சில சமயங்களில் கோபம் கொலைக்கும் காரணமாகிறது.பிறரைக் கொல்லுவதோடு தன்னையும் சிலவேளைகளில் கொன்று கொல்கிறான்.இதனால்த்தான் சினம் சேர்ந்தாரை கொல்லியென்று கூறினார்கள்போலும்.பெருந்தீமையை விளைவிக்கும் இந்தக் கோபத்தை இளைமையில் இருந்தே அடக்க முயற்சிக்க வேண்டும்.

சரி இனி கதைக்கு வருவோம்:

உலகத்தில் மனிதர்களில் பலபேர்கள் ஒழுக்கம் குறைந்து தர்மத்தை விட்டு மிகவும் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று வெறுத்துப்போய் மனிதர்கள் இல்லாத இடத்தில் இருக்க விரும்பி கோதாவரிக் கரையில் தனிமையாய் பர்ணசாலை ஒன்று அமைத்து தன்னுடைய விரத அனுஷ்டானங்களை செய்து வந்தார் அந்தணர் ஒருவர்.இதனால் மோட்ஷத்தை அடையலாம் என்பது அவரின் எண்ணம்.

ஒரு நாள் அவர் ஆற்றில் மூழ்கி எழுந்து தன் உடம்பெங்கும் விபூதியை பூசிக்கொண்டு உருத்திராட்ச மாலைகள் அணிந்து ஒருபுறமாய் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வெயிலில் களைத்துப்போய் வந்த ஏழை ஒருவன் அங்கு இவர் இருந்த நிலையை கவனியாமல் ஆற்று நீரில் இறங்கி முழுகி தன்னுடைய அழுக்கடைந்த கந்தை துணிகளை
அங்கிருந்த கல்லின்மேல் அடித்து துவைக்க ஆரம்பித்தான்.

அப்போது துணியிலிருந்த நீர்த்துளிகள் ஜபம் செய்து கொண்டிருந்தவர் மேல் பட்டவுடன் சட்டென்று கண்களை திறந்து பார்த்தவருக்கு கடுங்கோபம்,உடன் ஆவசத்துடன் எழுந்து ஓடிச்சென்று அந்த ஏழையை அடித்து “அடேய்! நீ கொஞ்சம்கூட பயமில்லாமல் இங்கு வந்தது மட்டுமில்லாமல்
என் மேல் உன் அசிங்கமான அழுக்குத் துணியில் உள்ள தண்ணீரை தெரித்து என் விதத்திற்கு பங்கம் செய்துவிட்டாய் இனி ஒரு கண நேரம் இங்கு நின்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் ஓடிப்போ” என்று அதட்டினார்.

அந்த ஏழை உடனே அவரின் காலில் விழுந்து“ஐயா நீங்கள் இருந்ததை அறியாமல் இப்படி செய்து விட்டேன் பொறுத்து அருளவும் இதோ நான் வெகு தூரம் போய் விடுகிறேன்”என்று பணிவோடு சொல்லி வணங்கி எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

அழுக்கு துணிகளில் உள்ள நீர்த்துளிகள் பட்டு தீட்டடைந்து விட்டது என்று இவர் மீண்டும் நதியில் இறங்கி மூழ்கி குளித்து கரையேறினார்.அப்பொழுது சிறிது தூரத்தில் அந்த ஏழையும் மறுபடி ஒரு முறை ஆற்றில் மூழ்கி கரை சேர்ந்ததை பார்த்து அவனை சத்தமாக கத்தி கூப்பிட்டு ”அடேய் பாவி நான் உன்னை தீண்டின தீட்டுக்காக மீண்டும் தலை மூழ்கினேன் நீ எதற்காக இன்னொரு முறை மூழ்கினாய்?”என்று கேட்டார்.

அதற்கு அந்த ஏழை”ஐயனே!என்னைத்தீண்டிய தோஷத்திற்கு நீங்கள் மூழ்கினீர்கள் கோபமாகிய சண்டாளன் உங்கள் மேல் ஆவேசித்திருந்தபோது நீங்கள் என்னை தீண்டியதால் நேரிட்ட பெருந்தோஷத்திற்காக நான் மீண்டும் தலை முழுகினேன்”! என்று மறுமொழி சொன்னான். அப்பொழுதுதான் அவர் தனக்குள் கோபம் என்ற ஒன்று வந்ததால் எப்படி இப்படியோர் இழிந்த செயலை செய்து விட்டோம் என்று உணர்ந்து வருந்தி அவனிடம் சென்று தலைவணங்கி அவனையே குருவாகக்கொண்டு கோபத்திற்கு இடங்கொடாமல் நன்னெறியில் நின்றார்.

கோபத்தை மனதார அடக்கியவன் மனிதர்களுள் உயர்ந்தவன் ஆவதோடு தெய்வமாகவும் எண்ணப்படுவான்.சினத்தை விட்டவன் ஏழையாயினும் உயர்ந்தோனே!.

வெள்ளி, 14 மார்ச், 2008

1.அறஞ்செயவிரும்பு

தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள் தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொரு ள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம்.

ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது.

'தர்மமே ஜயம்' 'தர்மம் தலை காக்கும்' என்னும் பழமொழிகளே தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்துக் காட்டும். தர்மம் எப்படி தலைகாக்கும் என்பது பெரும்பாலும் நாம் அறிந்துதான் இருக்கிறோம். என்றாலும் இக்கதை அதைப் பற்றி மேலும் விவரிக்கின்றது.

குந்திபோசவம்ச ராஜனான சூரசேனனுக்கு குந்தி என்ற அழகிய மகள் இருந்தாள்,.அவள் துர்வாச ரிஷியின் அனுக்கிரகத்தில் கிடைத்த மந்திர சக்தியால் தான் கன்னியாய் இருக்கும்போதே ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள்! இதனால் தன் குலத்திற்கு பழி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பெற்ற குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விட்டு விட்டாள்.ஆற்றில் மிதந்து சென்ற பெட்டியை அத்தினாபுரி மன்னரின் தேரோட்டி கண்டெடுத்து அக்குழந்தைக்கு கர்ணன் என்று பெயரிட்டு தன் குழந்தை போல வளர்த்து வந்தான்.

கர்ணன் அரசர்களுக்கு உரிய வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் என பலவற்றையும் கற்றுத்தேர்ந்து அதில் சிறப்புடன் விளங்கினான்.இவனுடைய திறமைகளை அறிந்து பாராட்டிய அத்தினாபுர அரசகுமாரன் துரியோதனனுக்கும் இவனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உண்டானது. அந்த நட்பின் காரணமாய் துரியோதனன் கர்ணனை அங்கதேசத்திற்கு அரசனாக்கினான்.

கர்ணன் எப்போதும் தர்மம் செய்வதிலேயே நாட்டமுள்ளவன், யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மனமுடையவன். கொடையில் சிறந்தவன் கர்ணனே என்று எல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்டான்! இவன் பிறந்தபோது கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.அந்த கவசகுண்டலங்கள் இவனிடம் உள்ள அளவும் அவனை உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது.

இந்திரன் ஒரு முறை மாறுவேடம் கொண்டு கர்ணனிடம் வந்து அவனுடைய கவச குண்டலங்களை கேட்க கர்ணன் தன் உயிருக்கு உயிரான அவற்றையும் மனக்களிப்புடன் தானம் செய்தான்!

துரியோதனனுக்கும் பாண்டவர்களுக்கும் உண்டான மகாபாரத யுத்தத்தில் கர்ணன் தனது உயிர்த்தோழனான துரியோதனனுக்கு துணைவனாய்,அவன் சேனைக்குத் தலைவனாய் பேருதவி புரிந்தான்.

அப்பொழுது சேனாதிபதியான கர்ணனுக்கும், பாண்டவ வீரனான அருச்சுனனுக்கும் பெரும்போர் நடந்தது,போர்க்களத்தில் அடுத்தடுத்து அருச்சுனன் விட்ட அம்புகள் பாய்ந்ததில் அடிபட்டு மூர்ச்சித்து ரதத்தில் விழுந்து விட்ட கர்ணனைக் காப்பாற்றும் பொருட்டு அவன் இத்தனைநாளும் செய்த தருமத்தின் பலனாக தருமதேவதை அவனிருந்த ரதத்திற்கு முன் வெளிப்பட்டு நின்று அருச்சுனன் கணக்கில்லாமல் சொரிந்த அம்புகூட்டங்களையெல்லாம் கர்ணன் மேல் படாமல் விழுங்கி நின்றாள்!

அருச்சுனனும் அம்பு போட்டு போட்டு கை அசந்து போய் விட்டான்,இதையெல்லாம் கண்டு நின்ற பலரும் தர்மம் தலைகாத்து நிற்பதை பார்த்து வியந்து கர்ணனை புகழ்ந்தனர்.

அப்போது தர்மம் ஜெயித்து நிற்பதையும்,அருச்சுனன் தோற்றத்தையும் அறிந்த கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதனைப் போன்ற கோலத்தில் மயங்கி சரிந்து கிடக்கும் கர்ணனிடம் போய் அவன் செய்துள்ள தர்மத்தின் பலன் முழுவதையும் தானமாக கொடுக்க வேண்டினான்.

சாகுந்தறுவாயில் கிடக்கும் கர்ணன் இந்த நிலையிலும் தர்மம் செய்ய சமயம் வாய்த்ததே அதுவும் தர்மமாக கேட்கும் பொருளும் தன்னிடம் இருக்கிறதே என்று மிக மகிழ்ச்சியோடு தன் தருமத்தின் பலனையெல்லாம் தானம் கொடுத்து விட்டான்.அதன் பிறகுதான் கர்ணனை அருச்சுனனால் கொல்ல முடிந்தது. தர்மம் உள்ளவரை அவனை கொல்ல முடியவில்லை.

தருமமே ஜயம். அறம் செய விரும்பு. தருமம் தலை காக்கும்!