திங்கள், 2 மார்ச், 2009

13.அஃகஞ் சுருக்கேல்

தட்டுப்பாடு நிறைந்த தானியங்களை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்று பணம் சம்மாதிப்பது கூடாது.

ஜெர்மன் நாட்டில் ஹாட்டோ என்ற பாதிரி ஒருவன் இருந்தான்அவன் மிகவும் தீய குணமுடையவன் இரக்கம் சிறிதும் இல்லாத கல்நெஞ்சம் கொண்டவன்.

ஒரு காலத்தில் பஞ்சமுண்டான போது அளவிற்கு அதிகமான தனியங்களை சேகரித்து களஞ்சியங்களில் பதுக்கி வைத்து ஏழைகளுக்கு சிறிதும் கொடுக்காமல் அநியாய விலைக்கு விற்று வந்தான். அதில் பணம் அதிகம் கிடைத்ததில் வெகு சந்தோஷமாக கவலைகள் ஏதுமின்றி வாழ்ந்து வந்தான்.

நாளடைவில் தானியங்கள் இருப்பதை அறிந்து ஏராளமான எலிகள் களஞ்சியத்தினுள் புகுந்து மூட்டைகளை கடித்து குதறி தானியங்களை நாசம் செய்தன,அதை கண்ட ஹாட்டோ தினமும் எலிப்பொறிகளை வைத்து அவைகளை பிடித்து கொன்று வந்தான்.ஆனாலும் எலிகள் அதிகமானதே தவிர குறையவில்லை!.

தான் பதுக்கி வைத்துள்ள தானியங்கள் எல்லாவற்றையும் இந்த எலிகளே தின்று தீர்த்து விட்டால் என்ன செய்வது என்று ஆத்திரமுற்ற ஹாட்டோ அவைகளை ஒரேயடியாக அழிக்க எண்ணி அங்குள்ள ஏழைகளை பலரை கூப்பிட்டு களஞ்சியதினுள் எலிகள் இருக்கின்றதால் தானிய மூட்டைகளை அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் அதற்கு உதவினால் அவர்கள் எல்லோருக்கும் உணவளித்து மேலும் எல்லோருக்கும் தானியங்களும் தருவதாக கூறி அழைத்தான்.

அந்த அப்பாவி ஏழைகளும் அவனின் வார்த்தைகளை நம்பி அவன் சொன்னது போல தானிய மூட்டைகள் யாவற்றையும் அங்கிருந்து எடுத்து வேறோர் இடத்தில் பத்திரப்படுத்தினார்கள்.அவர்கள் அப்படி தானிய மூட்டைகளை நகற்றும் போது அதனுள் இருந்து ஏராளமான எலிகள் தாவி குதித்து அங்கிருந்த சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலுமாக ஓடி ஒளிந்தன.

எல்லா வேலைகளும் முடிந்தவுடன் அன்றிரவு உணவளிப்பதாக கூறி அவர்களை அங்கு வரவழைத்து எலிகளோடு அவர்களும் சாகட்டும் என்று களஞ்சியத்தை பூட்டி நெருப்பு வைத்து விட்டான்.

தானியங்களை நாசப்படுத்திய எலிகளாலும்,அந்த ஏழைகளாலும் இனி எந்த தொந்தரவும் இல்லை நமக்கு தொல்லை விட்டது என்று எண்ணி கவலையேபடாமல் தூங்கப்போனான்.

இது தெரிந்த ஏழை மக்கள் பெரும் கோபத்தோடு கூட்டமாக ஹாட்டோவின் மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள் நுழைந்தார்கள் அது கண்டு ஹாட்டோவும் மிகுந்த கஷ்டப்பட்டு அவர்களிடம் இருந்து தப்பி ஓடினான். அவர்கள் விடாமல் அவனை விரட்டி பிடித்து எல்லோருமாக சேர்ந்து அவன் எழுந்து நடமாட முடியாதபடிக்கு நையப்புடைத்து விட்டார்கள்.

அவன் சேர்த்துவைத்திருந்த தானியங்களும் பறி போய்விட்டது.
ஹாட்டோவும் தன் வினை தன்னைச்சுடும் என்பதற்கு தக்கபடி தண்டிக்கப்பட்டான்.

வியாழன், 20 நவம்பர், 2008

12. ஔவியம் பேசேல்

பொறாமையை மேற்கொண்டு பேசாதே என்பது இதன் பொருள்.

ஒருவனிடத்தில் உள்ள கல்வி செல்வம் செல்வாக்கு குணம் முதலியவற்றை கண்டபோது அவன் மேல் பொறாமை கொண்டு அவனை சீரழித்து இழித்து பேசுதல் மிகுந்த தீமையை விளைவிக்கும்.

இச்செய்கையால் இம்மையில் பாவமும் மறுமையில் நரகமும் உண்டாகும் என்பார்கள்.பொறாமைப் பேய் பிடித்தவர்கள் பிறருக்கு தீங்கிழைப்பதோடு தமக்கும் தீமையை உண்டாக்கிக் கொள்வார்கள்.

'ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு'என்று இதன் தீமையை ஔவையார் எடுத்துக் காட்டினார்.

பாண்டுவின் மனைவியாகிய குந்தி ஆண் குழந்தை பெற்ற விபரம் கேள்விப்பட்டு அஸ்தினாபுரத்தின் அரசனான திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி குந்தியின் மேல் பொறாமை கொண்டு தான் பல வருடங்களாக சுமந்திருந்த கர்ப்பத்தை சிதைத்துக்கொண்டாள்.

அப்படி அவள் செய்யாதிருந்திருந்தால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை ஏகசக்ராதிபதியாய் மூன்று உலகங்களிலும் தன்னாண்மை செலுத்தி அரசாட்சி செய்யும் மகாசூரனாயிருந்திருப்பான்.அப்படி இல்லாமல் சிதைந்த கர்ப்பம் வேதவியாசர் அருளால் ஒருவாறு கூடப்பெற்று அதனால் பொறாமைகிருப்பிடமான துரியோதனன் பிறந்தான்.

துரியோதனன் செல்வத்திலும் சௌகர்யத்திலும் மிகுந்து விளங்கும் பாண்டவர் மேல் பொறாமை கொண்டு அவர்களை வஞ்சகமாக அழைத்து மாயச்சூதாடி நாடு நகரம் முதலியவற்றை கவர்ந்து கொண்டதுமன்றி திரௌபதியை நடுச்சபையில் இழுத்து வந்து துகிலுரிந்து மானபங்கமும் செய்தான்.அதனால் துரியோதனன் மகாபாரத யுத்தத்தில் புத்திர மித்திர பந்து வர்க்கங்களோடு மரணமடைந்தது மட்டுமல்லாது நரக வேதனை களையும் அனுபவித்தான் என்று நூல்கள் கூறுகின்றன.

இதனால் பொறாமையால் இம்மை மறுமை இரண்டிலும் கேடு உண்டாகும் என்பது தெளிவாய் விளங்குகிறது.

ஔவியம் பேசேல் என்பதற்கு வீண் பெருமை பேசக்கூடாது என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.

11.ஓதுவதொழியேல்

எக்காலத்தும் அறிவினை வளர்க்கும் நூல்களைப் படிப்பதில் இருந்து விலகாதே என்பது இதன் பொருள்.ஒருவனுக்கு கல்விபோல் உறுதியைத்தருவது வேறொன்றும் இல்லை.

ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறப்பும் தொடர்ந்து உதவும் என்று பெரியவர்கள் உறுதியாய்க் கூறியிருக்கின்றனர்.தக்க கல்வியால் அறிவு வளர்தல் நிச்சயம்,ஆதலால் ஓதுவது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

இங்கிலாந்து நாட்டில் விக்டோரியா மகாராணியார் அரசுபுரிந்த காலத்தில் ‘கிளாட்ஸ்டன்’என்னும் பிரபு பிரதான மந்திரியாக இருந்தார்.அவர் தனது வீட்டில் பெரிய புத்தகசாலை ஒன்று வைத்து தமக்கு இருக்கும் பலதரப்பட்ட வேலைகளுக்கிடையில் கிடைக்கும் சொற்ப நேரத்திலும் இடைவிடாமல் படித்து வந்தார். என்னேரமாயினும் தினமும் இரவு இரண்டு மூன்று மணி நேரமாகிலும் படித்த பிறகே அவர் உறங்குவது வழக்கம்.அப்படி இடைவிடாமல் படித்து வந்த காரணத்தால் எல்லோரும் புகழும்படி ஒப்புயர்வில்லாத உன்னத நிலையை அடைந்தார்.

திருவள்ளுவரும்,வேதவியாசரும் இன்னும் இவர்களைப்போன்ற பலப்பல அறிஞர்களும்கூட கல்வியின் மேன்மையினால் யாவராலும் எக்காலத்திலும் கொண்டாடப்படும் பெருமை அடைந்து விளங்கினர்.

சிறிது கல்விகற்ற மாத்திரத்தில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவிட்டதாக எண்ணி அகந்தை கொண்டு திரிபவர் அறிவில்லாதவர்களே.அறிவுடையோர் மேலும் மேலும் கற்கும் ஆர்வம் கொண்டு எப்போதும் கற்பதை கை விடமாட்டார்கள்.

“பாடையேறினும் ஏடது கைவிடேல்”என்று இரு பொருள் தரும்படி நமது நாட்டில் வழங்கும் பழமொழி இதன் கருத்தை தெளிவாய்க்காட்டும்.கலைமகளும் இன்னும் கல்வி கற்பதாகக்கூறும் கருத்தும் இது பற்றியேதான்.

ஆதலால் கிடைத்த அவகாசங்களிலெல்லாம் தொடர்ந்து படிக்கவேண்டும்.

செவ்வாய், 4 நவம்பர், 2008

10.ஒப்புரவொழுகு

உலகத்தார் ஒப்புக்கொள்ளும்படியான ஒழுக்கத்தில் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள்.

பலரும் நேர்மை உள்ளதாக எண்ணுவதை இல்லாததாக எண்ணுவதும், பிழை உள்ளதாக நினைப்பதை நேர்மையாக எண்ணுவதும் பெரிதும் அவமானத்திற்கு உள்ளாக்கும்.

மேலும் பெரியோர்களால் நியாயமாக ஆராயப்பட்டு தகுதியானது என்று மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொள்ளாமல் நடப்பது பெரும் தீங்கினையும் விளைவிக்கும்.அப்படி இருப்பதால் இகழ்ச்சி அடைவதோடு இல்லாமல் எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகி சிலவேளைகளில் தீமையையும் அடையவும் நேரிடும்.

இளையான்குடி மாறர் என்ற சிவனடியார் ஒருவர் இருந்தார், அவர் தம் இடத்திற்கு வரும் சிவனடியார்களை பெரிதும் உபசரித்து விருந்தளித்து அவர்களுடைய மகிழ்ச்சி கண்டு தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.தன் செல்வம் முழுதும் இப்படியே செலவழித்ததில் அவர்கள் சீக்கிரமே வறுமை அடைந்தார்கள்.

ஒரு நாள் சிவபெருமான் ஒரு சிவனடியாரைப் போல வேடமணிந்து அவர்கள் வீட்டிற்கு விருந்துக்கு வந்தார்.அப்பொழுது மாறர் தமது வறுமை நிலைமைக்காக வருந்தி நிலத்தில் விதைத்திருந்த முளை நெற்களை வாரி வந்து தமது மனைவியிடம் கொடுத்து உணவு சமைக்கச்சொன்னார்.அவளும் கிடைத்த கீரையையும் நெல் முளைகளையும் பக்குவமாக சமைத்து சிவனடியாருக்கு இட்டாள்.

வந்த சிவனடியார்க்கு தக்கவாறு உபசரிக்கவேண்டிய செல்வம் இல்லையே என்று வருந்தினாள் தங்களுடைய முன் இருந்த நிலையை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகினாள்.

தாங்கள் பிறருக்கு செய்ய வேண்டிய உபசாரங்கள் குறைய நேரிட்டதற்காகவே ஒப்புரவு(உபகாரம்)அறிந்தவர்கள் தங்கள் வறுமை நிலைக்கு மிகவும் வருந்துவார்கள்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

9.ஐயமிட்டுண்

இல்லை என்று வந்த ஏழை களுக்கு பிச்சை இட்டு தானும் உண்ண வேண்டும் என்பது இதன் பொருள். இல்லாதவர்களுக்கு பிச்சை இடுவது தருமங்களுள் சிறந்தது.

“வறியார்க்கொன்றீவதேயீகை”என்று இதனை பாராட்டி கூறி இருக்கின்றார்கள் முன்னோர். தரும சிந்தனையை வளர்ப்பதற்கு இச்செய்கை அவசியம் வேண்டும்.

மகா பாரத யுத்தத்தில் வெற்றியடைந்த தரும புத்திரர் பிறரால் எளிதாக செய்ய இயலாத அசுவமேதமென்கிற யாகம் ஒன்று செய்தார். பற்பல நாட்டின் அரசர்களும் வேதாகம புராணங்களில் மேன்மை அடைந்த வேதியர்களும்,தவ சிரேஷ்டர்களும், முனிவர்களும் அங்கு வந்து கூடி இருந்தனர்.

தருமபுத்திரர், வந்திருந்த அந்தணர் முதலியவர் களுக்கு அளவற்ற செல்வங்களை தானம் செய்து கொண்டு இருந்தார்.அந்த சமயத்தில் ஒரு கீரிப்பிள்ளை தனது பாதி உடம்பு தங்கம் போல பிரகாசிக்க அங்கு வந்து தருமபுத்திரர் முன்னால் வெள்ளமாய் ஓடும் தானசெய்கின்ற தண்ணீரில் விழுந்து புரண்டது,அங்குள்ளோர் அதைப்பார்த்து அதிசயப்பட்டனர்!

தருமபுத்திரர் கீரிப்பிள்ளையை பார்த்து ”கீரியே உன் பாதி உடம்பு ஏன் பொன்னிறமாக இருக்கிறது?இங்கு வந்து ஏன் இப்படி புரளுகிறாய் என்று கேட்டார்.இதைக்கேட்ட கீரிப்பிள்ளை தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

“ஐயா அரசரில் சிறந்தவரே!நான் வசித்துவரும் காட்டில் ஒரு ஏழை முனிவர்(குடும்பத்துடன் தவம் செய்பவர்)வந்து சேர்ந்து குடிசை ஒன்று அமைத்து அதில் தமது மனைவி,மகன், மருமகளோடு வாழ்ந்து வந்தார்.காட்டில் உள்ள காய் கனி கிழங்கு இவைகளே அவர்களுக்கு உணவு.

ஒரு தடவை மழையே இல்லாமல் இவைகளும் கிடைப்பது அரிதாகி விட்டது.அப்பொழுது காட்டில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை சிறிது சிறிதாகச் சேர்த்து அதனை மாவாக அரைத்து சாப்பிடுவார்கள்.சில நாட்களில் அந்த தானியங்களும் கிடைப்பது குறைந்து விட்டது. அதன் பிறகு மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பாடு என்று ஆகிவிட்டது.

ஒரு நாள் எங்கெல்லாமோ தேடி கிடைத்த சிறிது தானியங்களை சேகரித்துக் கொண்டு வந்து பக்குவப்படுத்தி நான்கு நாட்களுக்கப்புறம் நான்கு பேரும் பகிர்ந்து உண்ணப்போகும் சமயத்தில்,எங்கிருந்தோ முதியவர் ஒருவர் அங்கு வந்து”ஐயா பெரியோர்களே நான் சாப்பிட்டு பத்து நாட்கள் ஆகி விட்டது,பசி தாங்க முடியவில்லை தயவு செய்து உணவு சிறிது அளிக்கவேண்டும்”என்று மிகவும் கெஞ்சி பிச்சை கேட்டு நின்றார்,கண்கள் பஞ்சடைந்து அதிக களைப்பினால் அவரால் நிற்கக் கூட முடியவில்லை.

அதைப் பார்த்த முனிவர் தன் பசியைப் பொருட்படுத்தாது அந்த பிச்சைக் காரருக்கு தனது பங்கு உணவைக் கொடுத்து உபசரித்தார். அது அந்த முதியவருக்கு போதவில்லை அதை அறிந்த மற்ற மூவரும் தத்தமது பங்கையும் கொடுத்தனர்.முதியவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அவர்களை மனதார வாழ்த்திச் சென்றார்.அவர் அந்த இடத்தை விட்டுச் சென்ற அடுத்த நொடி அங்கு தேவர்களின் புஷ்பக விமானம் ஒன்று வந்து அந்த நால்வரையும் ஏற்றிச் சென்றது.

அன்ன ஆகாரமின்றி பல பல இடங்களிலும் அலைந்து திரிந்து பசியால் வருந்திய நான் அந்த இடத்திற்கு வந்த போது அங்கு நடந்த அதிசயங்களை கண்டேன்.

பிறகு அந்தக் குடிசையின் உள்ளே புகுந்து கீழே சிந்திக்கிடந்த மாவை உண்ணும்போது அது என் மேலெல்லாம் ஒட்டிக்கொண்டது,அந்த மா ஒட்டிக் கொண்ட என் உடம்பின் பாகங்கள் எல்லாம் மாற்றுக்குறையாத தங்கமாக மின்னியது!

அதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்து அந்த முனிவர் செய்த தருமத்தின் பெருமையை வியந்து மகிழ்ந்திருந்தேன்.பொன்னிறமான எனது பாதி உடல் எனக்கு அந்த தருமத்தின் சிறப்பை எப்பொழுதும் நினைப்பூட்டுகின்றது, தருமபூபதியே” என்று கூறிய கீரி மேலும்..

”எனது உடம்பின் மற்றொரு பாதியும் பொன் நிறமாக வேண்டி தாங்கள் செய்த தான ஜலத்தில் விழுந்து புரண்டேன்,ஆனால் எனது வாலின் கடைசியில் உள்ள இரண்டொரு முடிகள் மாத்திரமே பொன் நிறமாக மாறி இருக்கிறது,ஆதாலால் நீங்கள் செய்யும் அசுவமேதத்தைவிட அந்த முனிவர் செய்த அதிதி பூஜையே மிகவும் சிறந்தது!”

என்று அங்கு கூடி இருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாகச் சொல்லி விட்டு தன் இருப்பிடம் தேடி அங்கிருந்து ஓடிச்சென்றது கீரிப்பிள்ளை.

8.ஏற்பதிகழ்ச்சி

பிச்சை எடுத்தல் என்பது அவமானம் தரும் செய்கை என்பதில் சந்தேகம் இல்லை. பிச்சை எடுப்பவன், ஒருவனிடத்தில் பிச்சை கேட்கின்ற நேரத்தில் தன்னுடைய உடல் மனம் யாவும் குன்றிப்போய் விடுகிறான்.பிச்சை எடுத்து பிழைத்தல் என்பது தன் மானத்தை விட்டு வயிறு வளர்க்கும் தொழிலாகிவிடுகிறது.

மகாபலிச்சக்கிரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் பெற்ற திருமாலும்கூட தானம் பெற்றதால் ஏற்பட்ட இழிவினால் தனது திருமேனி குன்றி வாமனரானார் என்று புலவர்களும் கற்பனை செய்திருக்கிறார்கள்.

“பல்லெல்லாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச்
சொல்லெல்லாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி
மல்லெலா மகலவோட்டி மானமென்பதனை வீட்டி
யில்லெலா மிரத்த லந்தோ விழி விழி வெந்த ஞான்றும்”

என்ற செய்யுள் பிச்சை எடுத்து பிழைப்போரின் அவல நிலையை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

புதன், 23 ஜூலை, 2008

7.எண்ணெழுத்திகழேல்

எண் என்பது கணித நூல்,எழுத்தென்பது இலக்கண நூல்.இந்த இரண்டையும் மறவாமல்(இகழாமல்)கற்க வேண்டும்.

இவ‌ற்றை பயனற்றவை என்று எண்ணி அல‌ட்சியப்ப‌டுத்தக்கூடாது.

இவைகளை க‌ற்று அறிந்த‌வ‌ர்க‌ளுக்கே ஞான‌ நூல்க‌ள் தெளிவாக புரிப‌டும்,ஒருவருக்கு கணிதமும்,இலக்கணமும் இரு கண்கள் போல மிக முக்கியமானவை.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்'என்ப‌தும் இத‌னால்தான்.

அவந்தி தேச‌த்தில் இராஜ‌வேல் என்ற‌ அர‌சனுக்கு மிக‌வும் அழ‌கான ஆனால் சிறிதும் எழுத்தறிவில்லாத ம‌க‌ன் ஒருவன் இருந்தான் அவ‌னுக்கு எப்பாடு பட்டாகிலும் ப‌டிப்ப‌றிவை புக‌ட்டிவிட‌லாம் என்று அரசன் எவ்வ‌ள‌வோ முய‌ற்சிக‌ள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்க வில்லை.இத‌னால் கோப‌ம‌டைந்த‌ ம‌ன்னன்,இவன் இந்த நாட்டை ஆளுவதற்கு ஏற்ற‌வ‌ன் இல்லை என்று த‌ன் நாட்டை விட்டே அனுப்பி விட்டான்.அர‌ச‌குமாரனும் த‌ன‌து சொந்த நாட்டை விட்டு தென்னாட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்தான்.

ஒரு நாள் சோழ‌ராஜ‌ன் த‌லைந‌க‌ர‌மான காவிரிப்பூம் ப‌ட்ட‌ண‌த்திற்குள் நுழைந்து அங்கு ராஜ‌வீதியில் போய்க் கொண்டிருந்தான்.அப்பொழுது அர‌ண்ம‌னையின் மேல் மாட‌த்தில் நின்று கொண்டிருந்த‌ சோழ‌ ம‌ன்ன‌னின் ம‌க‌ள் அர‌ச‌குமார‌னின் அழ‌கில் மயங்கி அவனை சந்திக்க எண்ணி அன்று மாலை நகர்புறத்தில் உள்ள ஒரு வசந்த மண்டபத் திற்கு வரவேண்டும் என்ற தன் எண்ண‌த்தை ஒரு ஓலையில் எழுதி அதை அவனிடம் எறிந்தாள்.

எழுத‌றிவில்லாத‌ அர‌ச‌குமாரனோ அந்த‌ ஓலையில் என்ன‌ எழுதி இருக்கிற‌து என்று அறியாதவனாய் அதை தெரிந்து கொள்ள‌ விரும்பி யாரிட‌ம் கேட்ப‌து என்று யோசித்து ஊருக்கு வெளியில் உள்ள ஒரு ம‌ண்ட‌ப‌த்தில் இருந்த‌ ஒருவ‌னிட‌ம் அதை காட்டினான், அவ‌னோ மிக‌வும் கெட்ட‌வ‌ன், ஓலையில் எழுதியிருந்த‌தை ப‌டித்ததும் எப்படியாகிலும் அர‌ச‌குமார‌னை ஏமாற்றி விட்டு அர‌ச‌குமாரியை தான் அடைய விரும்பி அவ‌னிட‌ம் 'இனி நீ இங்கிருந்தால் உன் த‌லை போய்விடும் என்று எழுதி இருக்கிற‌து' என்றான்,அதை உண்மை என்று நம்பி ப‌யந்து போய் முட்டாள் அரசகுமாரன் சிறிதும் யோசியாமல் அந்த‌ ஊரை விட்டே போய் விட்டான்.

அன்றிர‌வு ராஜ‌குமாரி இவ‌ன் வ‌ர‌வை எதிர்பார்த்து வ‌சந்த‌ ம‌ண்ட‌ப‌த் திற்கு வ‌ர‌.. அங்கு தான் விரும்பிய அர‌ச‌குமார‌ன் அல்லாத‌ வேறொ ருவ‌ன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று உண‌ர்ந்த‌தும் வெட்க‌த் தினாலும்,துக்க‌த்தினாலும்,மிக‌வும் வருந்தி அப்பொழுதே த‌ன் உயிரை போக்கிக் கொண்டாள்.

பிறகு அங்கு நடந்த இந்த‌ விப‌ர‌ங்கள் யாவற்றையும் அறிந்த‌ அர‌ச‌ குமார‌ன் தான் செய்த‌ தவறினாலும்,தனக்காகவும்தானே ராஜ‌குமாரி உயிரை விட்டு விட்டாள் இனி நாம் உயிரோடு இருப்பதற்கு தகுதி இல்லை என்று நினைத்து வருந்தி அவ‌னும் த‌ன் உயிரை போக்கிக் கொண்டான்.க‌ல்விய‌றிவு இல்லாத‌ கார‌ண‌த்தால் இப்படியாக அவன் தன் வாழ்க்கையில் ப‌ல‌ இன்ன‌ல்களை எதிர்கொள்ள வேண்டிய‌தாகி விட்ட‌து.

எண்ணெழுத்திக‌ழேல் என்ப‌தில் 'எண் எழுத்து'என்ப‌த‌ற்கு எட்டெழுத்து என்றும்,யாவ‌ராலும் எண்ணுத‌ற்குரிய‌ எழுத்து என்றும் பொருள் கூறி க‌ட‌வுளின் திருநாம‌மாகிய‌ அஷ்டாக்ஷ்ர‌த்தை இகழாதே என்றும் சொல்வார்கள்.