ஞாயிறு, 16 மார்ச், 2008

3. இயல்வது கரவேல்

கையில் உள்ளதை கொடுக்காமல் ஒளிப்பது என்பது இதன் கருத்து.

தேகி(பிச்சை)என்று கேட்ட ஒரு பிச்சைக்காரனுக்கு கையில் உள்ள பொருளை இல்லையென்று ஒளித்து வைக்காமல் கொடுக்க வேண்டும் என்பது இதனால் விளக்கப்பட்டது.

ஸர் ஃபிலிப் ஸிட்னி என்ற பெயருடைய ஆங்கிலப் போர்வீரர் ஒருவர் இருந்தார்.அவர் எதிரிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் குண்டு பட்டு அதனால் பலத்த காயமுற்று கீழே விழுந்து விட்டார்.

அந்த வேளையில் அதிக களைப்பினால் அவருக்கு தாங்க முடியா அளவு தண்ணி தாகமெடுத்தது, அதனால் அவரின் படைவீரர்கள் சிலர் அவரின் அந்த தாகத்தை தணிக்கவென்று பல இடங்களிலும் தண்ணீரைத்தேடி கடைசியில் வெகு தூரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை ஒரு சிறு கிண்ணத்தில் கொண்டு வந்தனர்.

அவர் அந்த நீரை அருந்தப்போகும் சமயத்தில் அவரின் அருகே படுகாயமடைந்து கிடக்கும் படைவீரன் ஒருவன் அந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தையே மிகவும் ஆவலோடு பார்ப்பதை கண்ட ஸர் ஃபிலிப் ஸிட்னி உடனே தன்னுடைய தாகத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு கொண்டு வந்த தண்ணீரை அந்த வீரனுக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

அந்த மரண அவஸ்தையிலும் தன்னால் இயன்றதை ஒளிக்காமல் உதவின இவரைப் போன்றோருடைய பெருமை எக்காலத்திலும் இவ்வுலகில் நிலைபெற்று நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.

இல்லையென்னாமல் கொடுக்கும் பெருமை உலகத்தில் அழியாமல் நிலைபெறும்.

1 கருத்து:

Nathanjagk சொன்னது…

பிளாக்கில் ஆத்திச்சூடி விளக்கம் படிப்பது அருமை..!
இதை எழுதுவதும் ஒருவகையில் இயல்வது கரவேல்தான்.
என் பிளாக்கில் இந்த வலை பற்றி அறிமுகம் கொடுத்திருக்கிறேன்.